கோலாலம்பூர், டிசம்பர்.23-
செய்திகளை முந்தித் தருவதாகக் கருதி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடக்கூடாது என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வீட்டுக் காவல் தொடர்பான தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கின் தீர்ப்பு விவகாரத்தில் ஊடகங்கள் நிறைய தவறுகள் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன என்று துணை அமைச்சர் தியோ குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் எப்போதுமே அவசரமாக செய்திகள் தருவதற்கு பதில் சரியான செய்திகளைத் தர வேண்டும். செய்திகளை முந்தித் தருவதாக நினைத்து, உண்மைத்தன்மைகளில் விளையாடக்கூடாது என்று ஊடகங்களுக்கு தியோ நினைவுறுத்தினார்.
நேற்று காலை 9.48 மணியளவில் ராய்ட்டர் செய்தி நிறுவனம், நஜீப் வீட்டுக் காவலில் இருக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகை தனது அகப்பக்கத்தில் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டு, சுமார் 20 நிமிடம் வரை அந்த செய்தி திரையில் அப்படியே இருந்ததாக தியோ சுட்டிக் காட்டினார்.
அந்த செய்தி வெளியிடப்பட்ட நேரத்தில் உண்மையில் தீர்ப்பு வரவில்லை. மாறாக, உயர் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்புக்கான காரணங்களை அந்நேரத்தில் வாசித்துக் கொண்டு இருந்தார். ஆனால், தீர்ப்பு மாறிய நிலையில் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட முந்தைய செய்தி நேரமாறாக அமைந்தது என்று தியோ சுட்டிக் காட்டினார்.








