கெடா மாநிலத்திற்கும், பினாங்கிற்கும் இடையில் நிலவி வரும் குடிநீர் விநியோகம் மீதான சர்ச்சையை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்ற நடவடிக்கையை நாடவிருப்பதாக கெடா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
கெடா, சுங்கை மூடா ஆற்றிலிருந்து பினாங்கு மாநிலம் பெற்று வருகின்ற சுத்திகரிக்கப்படாத நீருக்கு கட்டணம் வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பினாங்கு அரசுக்கு எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கையை தொடுக்கவிருப்பதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் அறிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
கெடாவில் உள்ள உலு மூடா மலைப்பகுதியில் தொடங்கி, பினாங்கு வரை பாயும் மூடா ஆற்றின் நீருக்கு பினாங்கு அரசு முறைப்படி கெடா மாநில அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். என்று கெடா மாநில அரசு ஏற்கனவே தனது கோரிக்கையை பினாங்கு அரசுக்கு முன்வைத்து விட்டதாக சனூசி தெரிவித்துள்ளார்.
ஆனால், மாநில அரசு விடுத்த கோரிக்கைக்கு பினாங்கு அரசு இதுவரையில் எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் இருந்து வருவது தொடர்பில் சுங்கை மூடா ஆறு யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பதற்கு இவ்வழக்கு தொடுக்கப்படவிருப்பதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.








