புத்ராஜெயா, அக்டோபர்.01-
தனது வீட்டில் பணி புரிந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக பேரா, துரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போல் யோங்கிற்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட இறுதி மேல்முறையீட்டில் இன்று தோல்விக் கண்டதைத் தொடர்ந்து, பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரான அவர், உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
தனக்கு எதிரான சிறை மற்றும் பிரம்படித் தண்டனையை ரத்து செய்யக் கோரி, 55 வயதுடைய போல் யோங் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே தள்ளுபடி செய்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தில் போல் யோங் செய்து கொண்ட மேல்முறையீடு, நிறைவு பெறுவதால், அவரை உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லும்படி நீதிபதி தீர்ப்பு அளித்த போது, குற்றவாளி கூண்டில் நின்றிருந்த அந்த முன்னாள் ஜசெக. உறுப்பினர் கவலையில் உறைந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயதுடைய இந்தோனேசியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதித்தது.








