கோத்தா பாரு, செப்டம்பர்.25-
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஸைனாப் மருத்துவமனையின், குழந்தைகள் வார்டில் இருந்து, முறையான ஒப்புதல் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை, அதன் தாயாரிடம் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணியளவில், குழந்தை காணாமல் போனதை அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கோட் பிங்க் அவசர எச்சரிக்கையை விடுத்து, தேடுதல் பணிகளை மேற்கொண்டதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்ட போது, தம்பதி ஒருவர் அக்குழந்தையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 23-ஆம் தேதி, கோத்தா பாரு மாவட்ட சுகாதார அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன், அத்தம்பதியின் வீட்டிற்குச் சென்ற போது, அக்குழந்தையும், அதன் தாயாரும் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.








