ஆயர் குரோ, ஜூலை.27-
நாட்டில் நிலவி வரும் புகை மூட்டம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 200 யை தொடுமானால், பள்ளிகள் மூடப்பட நேரிடலாம் என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ள முடிவு தொடர்பாக, அமைச்சர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என மெக்பி எனப்படும் பெற்றோர் கல்வி செயல்பாட்டுக் குழுவின் மலாக்கா மாநிலத் தலைவர் மாக் சீ கின் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, பிடிபிஆர் எனப்படும் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் இல்லை என்றும் வேலைக்கும் செல்லும் பெற்றோர்களால் பிள்ளைகளை வீட்டிலிருந்து கண்காணிக்க அவர்கள் தயாராகவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
கோவிட் 19 காலக் கட்டத்தில், இணையத் தொடர்பு பிரச்சனைகள், கணினி வசதியின்மை, கட்டொழுங்கு பிரச்சனைகள் பரவலாக இருந்தன என அவர் மேலும் கூறினார். புகை மூட்டப் பிரச்சனைக்குக் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆக்கப்பூர்மான தீர்வை எடுக்கும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக மாக் சீ கின் கூறினார்.








