கோலாலம்பூர், நவம்பர்.25-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவிருந்த வேளையில் தீர்ப்புத் தேதியில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பை முன்கூட்டியே கூறுவதற்கு ஏதுவாக தீர்ப்புத் தேதியை வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு மாற்றி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி லோக் யீ சிங் இன்று அனுமதி அளித்தார்.
இதன் வழி நஜீப்பிற்கு வீட்டுக் காவல் அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து அடுத்த மாதம் 22 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி லோக் யீ சிங் தெரிவித்தார்.
தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை, வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாகக் கூறி, டத்தோ ஶ்ரீ நஜீப் தொடுத்திருந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரும், நஜீப் வழக்கறிஞரும் நேற்று தங்கள் வாதத் தொகுப்புகளைச் சமர்ப்பித்தனர்.
SRC Internasional நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு புரிந்த குற்றத்திற்காக 72 வயது நஜீப், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.








