சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாவது வளர்ச்சித் திட்டமான RS-2-ஐ செயல்படுத்த சுமார் 33.31 பில்லியன் ரிங்கிட் நிதி தேவைப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி, மாநில சட்டமன்றத்தில் RS-2 அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமிருடின் ஷாரி, 2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான இந்த ஐந்தாண்டுத் திட்டத்திற்க்கான செலவை மாநில அரசாங்கம் மட்டுமே ஏற்காது என்றும், மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் மத்திய அரசும் நிதியளிக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் RS-2 திட்டத்தில் 6 முக்கிய இலக்குகள், 25 முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் 98 திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், பொருளாதார வளர்ச்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் அடங்குவதுடன், 2030-ஆம் ஆண்டிற்க்குள் 1.66 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முந்தைய RS-1 திட்டத்தின் 79 சதவிகித இலக்குகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து RS-2 உருவாக்கப்பட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்.
இந்நிலையில், மாநிலத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால வளர்ச்சிக்கு RS-2 புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








