பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.17-
விற்பனைப் பணிப் பெண்ணான சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டு, உடல் நிர்வாணக் கோலத்தில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் முஸ்தஃபா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை நிறுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அதிகாரியான 26 வயது K. கார்த்திக் மற்றும் ஒரு லோரி ஓட்டுநரான 23 வயது A. ஹரிபிரசாந்த் ஆகிய இருவரும் சரஸ்வதியைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கார்த்திக்கும், ஹரி பிரசாந்தும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை செர்டாங், ஶ்ரீ கெம்பாங்கான், புளூ வாட்டர் எஸ்டேட் சாலை வட்டத்திற்கு அருகில் ஜாலான் ஆர்கிட் என்ற இடத்தில் 24 வயதுடைய சரஸ்வதி என்ற சான் சீ கியோங்கை மிகக் கொடூரமாக கொலை செய்து அவரை நிர்வாணப்படுத்தியதாக இருவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
இருவருக்கும் ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








