பந்திங், பிப்ரவரி.15-
கோலா லங்காட், தாமான் பைடுரி பந்திங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிகாலை 4.42 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர். இருப்பினும், அந்த மாடி வீடு சுமார் 85 விழுக்காடு தீயில் எரிந்து சாம்பலாகியதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு - மீட்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
வீட்டிற்குள் இருவர் சிக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன, ஆனால் அந்தச் சிறுவனின் உடல் வீட்டின் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது. வீட்டில் மொத்தம் பத்து பேர் இருந்த நிலையில், ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.








