கோலாலம்பூர், செப்டம்பர்.08-
மலேசியாவைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, அங்கு தமது எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதாக புத்ரா மலேசியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹிடாயாதுல்லா முகமட் அலி கவலைத் தெரிவித்திருக்கிறார்.
அண்மைய காலமாக மலேசியா இப்படி ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது என்றும், அரசாங்கம் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹிடாயாதுல்லா முகமட் அலி வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் கிடைக்கும் அதிகமான ஊதியம், தெளிவான வளர்ச்சிப் பாதை, ஊக்கமளிக்கும் பணியிடக் கலாச்சாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் அவர்கள், அங்கேயே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரிகளை இழப்பது தேசத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் ஹிடாயாதுல்லா முகமட் அலி எச்சரித்துள்ளார்.








