ஒரு நிதி நிறுவனத்தின் வெற்றி அதன் வணிகச் செயல்பாட்டால் மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியின் பயன்கள் எந்த அளவுக்கு சமூகத்திற்குத் திரும்பச் செல்கின்றன என்பதன் அடிப்படையிலும் அளவிடப்பட வேண்டும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சி கியோங் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநில ஆளுநர் துன் பெஹின் ஸ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனைதி துவாங்கு ஜாஃபருக்கு மரியாதை நிமித்தமாக வருகை மேற்கொண்ட ஸ்டீவன் சிம், அஸ்தானா நெகிரி சரவாக்கில் நடைபெற்ற நிகழ்வில் இதனைத் தெரிவித்தார்.
இதனையொட்டி, 2025ஆம் நிதியாண்டுக்கான வணிக ஜகாத்தாக 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை பேங்க் ராக்யாட், சரவாக் பைத்துல்மால் நிதியத்திடம் ஒப்படைத்தது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சான குஸ்கோப்பின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ராக்யாட், 2016 முதல் 2025ஆம் ஆண்டு வரை சரவாக்கிற்கு மொத்தம் 17.4 மில்லியன் ரிங்கிட் வணிக ஜகாத்தை வழங்கியுள்ளது.
“வணிகம் வளரும்போது அதன் பயன்கள் சமூகத்திற்கும் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த ஜகாத் வழங்கல், சிறந்த வணிகச் செயல்பாட்டை மிகப் பெரிய சமூக தாக்கமாக மாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது,” என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
சரவாக்கின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பேங்க் ராக்யாட்டுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதனிடையே, சரவாக்கில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஸ்டீவன் சிம் விளக்கினார்.
2026 ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, பேங்க் ராக்யாட், தெக்குன் நேஷனல், எஸ்எம்இ வங்கி, அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்இ கார்ப் மலேசியா மற்றும் மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆகியவற்றின் மூலம் சரவாக்கில் உள்ள 32,000 தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு 800 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் தற்போது 77,098 நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், 1,212 கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. இக்கூட்டுறவு அமைப்புகளில் 323,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
உள்ளூர் தொழில்முனைவோர் நிலையான முறையில் வளர்வதற்கான நிதி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அவர்களின் வர்த்தகத் திறனை வலுப்படுத்தவும் சரவாக் அரசாங்கம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் குஸ்கோப் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படும் என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தெக்குன் நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஷிப்லி அபாங் சபுவான், பாங்க் ராக்யாட் தலைமை நிதி அதிகாரி நூர் ஹைமி ஜகாரியா, சரவாக் பாங்க் ராக்யாட் மண்டலத் தலைவர் அப்துல் அஜிஸ் ரொஸ்லி மற்றும் சரவாக் இஸ்லாமிய மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி மிஸ்னு பின் ஹாஜி தாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








