கோலாலம்பூர், செப்டம்பர்.19-
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமானுக்குக் காயம் விளைவித்த சம்பவம் தொடர்பில் 8 பேரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அரச மலேசிய போலீஸ் படை பரிந்துரை செய்துள்ளது.
போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் கற்களை எறிந்து வன்முறையில் இறங்கிய நபர்களில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த எட்டு பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இன்று மாலையில் பிராசிகியூஷன் தரப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.
அந்த எட்டு பேரும், தடுப்புக் காவல் அனுமதிக்குப் பிறகு தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ முகமட் உசோஃப் இதனைத் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் போலீசாரை நோக்கி எறிந்த கற்களினால் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானார் என்பதையும் டத்தோ முகமட் உசோஃப் சுட்டிக் காட்டினார்.








