ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் வழங்கினார்
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 3,594 மாணவர்களுக்குப் பள்ளி பேருந்து கட்டணமாக மொத்தம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 200 வெள்ளியை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் வழங்கினார்.
தோட்டப் புரங்களிலும், புற நகரிலும் வசிக்கின்ற பி40 தரப்பைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டண செலவினை ஏற்கும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பேருந்து கட்டணமாக 10 லட்சத்து 78 ஆயிரத்து 200 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக கணபதி ராவ் தெரிவித்தார்.
இன்று ஷா ஆலாமில், Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shahவின் Foyer SUK மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டணம் வழங்கும் நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகையில் கோத்தா கமுனிங் சட்ட மன்ற உறுப்பினருமான கணபதி ராவ் இதனை குறிப்பிட்டார்.
கடந்த 2013 ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு இந்த பேருந்து கட்டணத்தை வழங்கி வருவதாக குறிப்பிட்ட கணபதி ராவ், ஆண்டுக்கு ஆண்டு பேருந்து கட்டணத்திற்காக சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்கின்ற மானியத் தொகை மாறுப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை சிலாங்கூர் அரசு கடப்பாடாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதன் மூலம் பெற்றோர்களுக்கு நிதிச் சுமை குறையக்கூடும் என்பதுடன், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வர பேர் உதவியாக இருக்கும் என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசு வழங்கிய இந்த மானியம், முழுக்க முழுக்க தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சென்றடைகிறதே தவிர, அதிலிருந்து ஒரு சல்லிக் காசு கூட தாமோ, தமது அலுவலகமோ பெற்றுக்கொண்டது கிடையாது என்று கணபதி ராவ் குறிப்பிட்டார்.
அடுத்து 30 நாட்களுக்குப் பிறகு, ஆட்சிக்குழு உறுப்பினராக தாம் பதவிவகிக்காமல் போகலாம். ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்து வரும் இந்த உதவித் தொகை ஆண்டுக்கு ஆண்டு தொடரப்பட வேண்டும், அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தம்முடைய எதிர்பார்ப்பாகும் என்று கணபதி ராவ் தமது உரையில் மிக உருக்கமாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.








