கோலாலம்பூர், ஜனவரி.07-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு வயது மூப்பு காரணமாக இடுப்பு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்படாது என்று அவரது மகன் டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை, தனது வீட்டின் பால்கனியில் வழக்கமான உடற்பயிற்சியின் போது துன் மகாதீர் கால் இடறி வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
துன் மகாதீருக்குத் தற்போது 100 வயது என்பதால், அறுவை சிகிச்சை செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேசிய இருதய சிகிச்சைக்கழகமான ஐஜேஎன் மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையான HUKM நிபுணர்களின் ஆலோசனையின்படி, அவர் இயல்பான முறையில் குணமடைவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வார் என்று முக்ரிஸ் குறிப்பிட்டார்.
இதற்காக அவர் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
துன் மகாதீர் தற்போது நினைவாற்றலுடன் தேறி வருவதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் அவரது தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும் முக்ரிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.








