கோலாலம்பூர், நவம்பர்.21-
இவ்வாண்டு, கேடிஎம்பி இரயில் சேவைகளில், மொத்தம் 1,300 மணி நேரங்கள் தாமதம் ஏற்பட்டதற்கு, இரயில் வழித்தடங்களில் நடத்தப்பட்ட கேபல் திருட்டு சம்பவங்கள் தான் காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
இந்த கேபல் திருட்டு சம்பவங்கள், கேடிஎம்பியின் முக்கியமான சமிக்ஞை அமைப்புகளை தொடர்ச்சியாகச் சீர்குலைத்து, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், மொத்தம் 104 கேபல் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அந்தோணி லோக் தனது எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கேடிஎம் இரயில் சேவைகளில், 741 மணி நேரங்கள் தாமதமும், மின்சார இரயில் சேவைகளில் 562 மணி நேரங்கள் தாமதமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








