கோலாலம்பூர், அக்டோபர்.09-
பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட், 13 ஆவது மலேசியா திட்டத்தின் முதலாவது ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டமாகும். 2022 ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து நிதி அமைச்சர் என்ற முறையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் நான்காவது பட்ஜெட் இதுவாகும்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட், முந்தைய ஆண்டு பட்ஜெட்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கொண்டு இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஆருடம் கூறியுள்ளனர். 2025 ஆம் ஆண்டு பட்ஜெட், 421 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கியதாகும்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட், 430 பில்லியன் ரிங்கிட் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசாங்கம், நிதி பற்றாக்குறை இடைவெளியைக் குறைக்க நிதி சீர்திருத்தங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளதால், இந்த பட்ஜெட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருக்கும் கூறப்படுகிறது.
சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பது, தேசிய வளர்ச்சியின் உச்சத்தை எட்டிப் பிடிக்கும் அதே வேளையில் பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் பிரதான அங்கமாக மடானி அரசாங்கத்தின் இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வியூகங்களையும் 2026 பட்ஜெட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தவிர, தற்போதைய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும் இந்த பட்ஜெட் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சபா மாநில தேர்தலையொட்டி அந்த மாநிலத்திற்கு இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமன திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் வாழ்க்கை செலவின உயர்வைக் கட்டுப்படுத்துதற்கும், சமாளிப்பதற்கும், எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா ரொக்க நிதி உதவி மற்றும் SARA ( சாரா ) எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா உதவித் திட்டம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் நிதி உதவியின் உச்ச வரம்பை, அரசாங்கம் விரிவுப்படுத்தக்கூடும் அல்லது புதிய நிதி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








