ஷா ஆலாம், அக்டோபர்.02-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் புதல்வரும், சிலாங்கூர் பட்டத்து இளவரசருமான ராஜா மூடா தெங்கு அமீர் ஷா, இன்று சிக் அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஸிஸ் என்பவரைக் கரம் பிடித்தார்.
இவர்களின் அரச திருமணம், இன்று கிள்ளான், ஆலாம் ஷா அரண்மனையில் உள்ள அரச பள்ளிவாசலில் நடைபெற்றது.
சிலாங்கூர் முப்தி, Anhar Opir திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண வைபம் காலை 10.08 மணிக்குத் தொடங்கிய போது, திருமணத் தொடக்கத்தைக் குறிக்கும் வைக்கும் வகையில் அரச பீராங்கி படையின் 41 ஆவது பட்டாளம், 11 பீராங்கி குண்டுகளை முழங்கியது.
சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் முன்னிலையில் நடைபெற்ற இந்த அரச திருமண வைபத்தில் அரச பேராளர்களும், மணமகளின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கெலரி டிராஜா சுல்தான் அப்துல் அஸிஸிலிருந்து, இஸ்தானா ஆலாம் ஷா - வரை அரச வாகனத்தில் சுமார் 650 மீட்டர் தூரம் வரை வலம் வந்த தெங்கு அமீர் ஷாவின் அரச மணக்கோலத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்ததுடன், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.








