ஈப்போ கேபிடிஎம் எனப்படும் மாரா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் நிர்வாக அதிகாரியான 44 வயது ரோய்கர்னாயென் மசேரி, ஆறு மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை ஈப்போவிலுள்ள இரு தனித்தனி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், அவருக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
முதல் இரு குற்றச்சாட்டுகளில், 19 மற்றும் 22 வயதுடைய இரு மாணவிகளின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் அத்துமீறியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் அக்கல்லூரியின் மாணவர் நடவடிக்கை அறையில் கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நீதிமன்றத்தில், 18 முதல் 20 வயதுடைய நான்கு மாணவிகளுக்கு அச்சம், மன உளைச்சல் அல்லது கவலை ஏற்படுத்தக்கூடிய ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இரு வழக்குகளின் அடுத்த விசாரணையானது வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.








