வாகனங்களின் உரிமை மாற்ற நடவடிக்கையில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், பேரா மாநில ஊழல் தடுப்பு ஆணையம், 6 அரசாங்க ஊழியர்கள் உட்பட 11 பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த 7 ஆண்கள் மற்றும் 4 பெண்களுக்கு, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று முதல் வரும் வரும் திங்கட்கிழமை வரை தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பேராக் எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 4 முகவர்கள் மற்றும் ஜேபிஜேவைச் சேர்ந்த 6 அதிகாரிகள் அடங்குவர்.
மொத்தம் 16 வாகனப் பதிவு எண்கள் தொடர்பான உரிமை மாற்ற நடவடிக்கையில் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க முகவர்களும் அரசு ஊழியர்களும் கூட்டுச் சதி செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 18-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக, பேராக் மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் அஸிஸுல் அஹ்மாட் சர்காவி உறுதிப்படுத்தியுள்ளார்.








