கோலாலம்பூர், நவம்பர்.18-
சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைப்புரண்டோடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக நம்பப்பபடும் 34 வயது கட்டுமானப் பணியாளர் கே. சுரேஷைத் தேடும் பணி, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருக்குச் சொந்தமான கைப்பேசியிலிருந்து கிடைக்கப் பெற்ற சமிக்ஞையின்படி பூச்சோங் அல்லது ஷா ஆலாம் முதலிய பகுதியைச் காட்டுவதாக உள்ளது என்று கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
அந்த கட்டுமான மேற்பார்வையாளரின் கைப்பேசி இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. அந்த கைப்பேசியை அவர் கைப்பையில் வைத்திருக்கலாம், ஆனால், அந்த கைப்பை அவரிடம்தான் உள்ளதா அல்லது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று ஏசிபி சஸாலி குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் சுரேஸிற்கு சொந்தமான Four-wheel drive Pajero Mitsubishi வாகனமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த வாகனமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு மீட்புப்படை, பொது தற்காப்பு படை, போலீஸ் படையின் மோப்ப நாய் பிரிவு என அதிகமான ஆள்பலத்துடன் இன்று சுங்கை கிளாங் ஆற்றில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. Dron போன்ற சாதனங்களும் பயன்படுத்தப்பட்டது. எந்தவொரு துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்று சம்பவ இடத்தில் காணப்பட்ட ஏசிபி சஸாலி தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் கனத்த மழை பெய்து கொண்டு இருந்த போது, கோலாலம்பூர் கம்போங் பாருவிற்கு அருகில் சுங்கை கிளாங் ஆற்றில் சலோமா பாலத்தின் கீழ் கட்டுமானத்தளத்தில் நின்று கொண்டு இருந்த சுரேஷ் மற்றும் 11 அந்நிய நாட்டவர்களும் ஆற்றில் திடீரென்று உயர்ந்த நீரில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு, மீட்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டு 11 அந்நியப் பிரஜைகளும் கயிற்றின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட வேளையில் தனது வாகனத்தை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த சுரேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.








