கோலாலம்பூர், நவம்பர்.06-
பிலிப்பைன்ஸைத் தாக்கிய Kalmaegi புயல், சபாவின் கூடாட் மாவட்டத்திலிருந்து வடமேற்கே சுமார் 405 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில், சூறாவளி காற்றானது, வடமேற்கு நோக்கி மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 194 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் மெட்மலேசியா கணித்துள்ளது.
இதனால், சபா மற்றும் லாபுவானில் தொடர்ச்சியான மழையை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள மெட்மலேசியா, தென் சீனக் கடலில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, பிலிப்பைன்சில் Kalmaegi புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.








