மலாக்கா, ஆகஸ்ட்.19-
கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மலாக்கா, சுங்கை ஊடாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் தண்டனை என்ற பெயரில் 20 க்கும் மேற்பட்ட மூன்றாம் படிவ மாணவர்கள், பள்ளியின் இரண்டு மூத்த மாணவிகளால் பகடிவதை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் சம்பவத்தைப் போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதனை மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் துறை தலைவர், உதவி ஆணையர் கிரிஸ்டப்பர் பாதிட் இன்று காலையில் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் புகார்களையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த இரண்டு மூத்த மாணவிகள் தற்போது குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால் அந்த இரு மூத்த மாணவிகளுக்கும் ஒரு வருடம் சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
பகடிவதைக்கு ஆளான மாணவர்களுக்கு உடலில் சீராய்ப்புக் காயங்களும், கால்களில் வீக்கமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாங்கள் தங்கியிருக்கும் பள்ளி ஹாஸ்டலுக்கு 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கால தாமதமாக வந்ததன் காரணமாக தண்டனை என்ற பேரில் அவர்கள் இரண்டு மூத்த மாணவிகளால் பகடிவதை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








