நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் 28 குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியது.

54 பேரின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 28 குடும்பங்கள் உதவி பெறத் தகுதி பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பெர்கேசோ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வில், பெர்கேசோ இயக்குநர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால், குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸீஸ் முகமட் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் உதவிகளை வழங்கினார்.

தகுதி பெற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,000 ரிங்கிட் உடனடி நிதியுதவி வழங்கப்படுவதுடன், வாரிசு ஓய்வூதியப் பலனும் வழங்கப்படும் என அவர் கூறினார். அதேநேரத்தில் பெர்கேசோவில் இடம் பெற்றிருக்காதவர்களுக்கு கூட்டு வியூகத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பெர்கெசோ ஆராயும். அவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் உதவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 16 குடும்பங்கள் நேரடியாக உதவியைப் பெற்றுக் கொண்ட நிலையில், ஏனைய குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், இதுவரை தொடர்புகொள்ளப்படாத தகுதியுள்ள குடும்பங்கள் அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்தை அணுகுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே பெர்கேசோ திட்டத்தின் வாயிலாக 28 குடும்பங்கள் நிதி உதவிப் பெற தகுதி பெற்றுள்ளதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் தோற்றுவிக்கப்பட்ட சோலிடரிடி: ஃபேமிலிஸ் இன் ஹோப் (Solidarity: Families in Hope) எனும் மஸ்ஃபீ (MASFIH) அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.

இந்த பேரிடரில் தமது சகோதரர் விஜயன் பெருமாளை இழந்த செல்வராஜ் பெருமாள் கூறுகையில், அரசாங்கத்தின் இந்த நிதி உதவியை வரவேற்கும் அதேவேளையில் இந்த சம்பவத்தினால் தற்போது மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிதி உதவி ஒப்படைக்கும் நிகழ்வில் பெர்கேசோவின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி நல்கினர்.








