47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது தொடர்பான விவகாரம் மக்களவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் என்று மாச்சாங் நாடாளுமன்றத் தொகுதி பாஸ் உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் இன்று கொண்டு வந்த தீர்மானத்தை மக்களவை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் நிராகரித்தார்.நாட்டின் துணைப்பிரதமராக முக்கியப் பதவி வகிக்கின்ற ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கை மக்களவை உடனடியாக விவாதிக்க வேண்டும். எனவே இந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கின்றதா? இல்லையா ? என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுடினும் மற்றும் வான் அஹ்மாட் ஃபைசாலும் வினவிய போது, அந்த தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக சபா நாயாகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.எனினும் இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரிதொரு சமயத்தில் தாம் வாய்ப்பு வழங்குவதாகவும், அது வரை பொறுமை காக்கும்படி பாஸ் எம்.பி. வான் அஹ்மாட் ஃபைசாலை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் கேட்டுக்கொண்டார்.