புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.10-
திருடிய கடல் உணவுகளுடன் தப்பிக்க முயன்ற வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், கத்தியைக் காட்டி 11 மாதக் குழந்தையைத் தாயிடம் இருந்து பிடுங்கி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று பினாங்கு, ஜாலான் தெலாகா ஆயிரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், குழந்தையின் தாயும் பொதுமக்களும் கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த ஆடவனை மடக்கிப் பிடித்தனர்.
36 வயதான அந்த ஆடவர், திருட்டு, தாக்குதல், அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட மஜிஸ்திரேட் நூருல் அய்னா அஹ்மாட் ஆணை வெளியிட்டுள்ளதாகவும் செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.








