புத்ராஜெயா, டிசம்பர்.28-
2026-ஆம் ஆண்டிலும் MySTEP வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடர மலேசிய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு, பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் தங்களின் திறமையை நிரூபிக்கவும், முதியோர்கள் மீண்டும் பொருளாதார நீரோட்டத்தில் இணையவும் இந்தத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது என மாற்றுத் திறன் தொழிலாளர் நிபுணர் டாக்டர் வான் அர்னிடாவாத்தி வான் அப்துல்லா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு காட்டுத் தீயால் பரவி வரும் வேளையில், அரசின் இந்த மாந்தநேயமிக்க நடவடிக்கை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் எனப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்காலிக வேலை வாய்ப்பு மட்டுமின்றி, இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையையும் பணி அனுபவத்தையும் வழங்கும் இந்த MySTEP திட்டம், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் வான் அர்னிடாவாத்தி குறிப்பிட்டார்.








