Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொடர்பு அமைச்சின் கட்டிடத்தில் 828 படிக்கட்டுகள் ஏறி, துணையமைச்சர் தனிப்பட்ட சாதனை
தற்போதைய செய்திகள்

தொடர்பு அமைச்சின் கட்டிடத்தில் 828 படிக்கட்டுகள் ஏறி, துணையமைச்சர் தனிப்பட்ட சாதனை

Share:

புத்ராஜெயா, ஜூலை.25-

தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் இன்று காலையில் தொடர்புத்துறை அமைச்சின் கட்டிடத்தில் 828 படிக்கட்டுகளை வெற்றிகரமாக 9 நிமிடங்கள் 26 வினாடிகளில் ஏறி தனிப்பட்ட சாதனை படைத்தார்.

மலேசிய கோபுர ஓட்ட இயக்கத் தலைவர் ரவீந்தர் சிங் மற்றும் உலக கோபுர ஓட்டச் சாதனையாளர் சோ வாய் சிங் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

"இது மிக சவாலான அனுபவமாக இருந்தாலும், திருப்திகரமாக உள்ளது. படிக்கட்டுகளில் ஏறுவது தரையில் நடப்பதை விட இரு மடங்கு கலோரி கரைக்கிறது. இது உடல்நலத்திற்கு மிகச் சிறந்த பயிற்சி," என சவாலை முடித்த தியோ தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை திருத்தளத்தில் 272 படிக்கட்டுகளை ஏறியதையும், அதை தன்னுடைய பிரத்தியேகச் சவாலாகவும், பாரம்பரிய நடைமுறையாகவும் எடுத்துக் கொண்டதாகப் பகிர்ந்தார்.

"இது போன்ற கோபுர ஓட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம்," என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

இதற்கிடையில், இப்பயிற்சியின் போது துணையமைச்சர் தியோ, 37 மாடிகளை மிக எளிதாகவும், வேகமாகவும் ஏறியதாக சோ வாய் சிங் தெரிவித்தார்.

“துணையமைச்சர் மிக வேகமாக 37 மாடிகள் ஏறினார். மற்ற அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் மத்தியில் உடற்தகுதியிலும், வேகத்திலும் இவர் முன்னணியில் இருக்கிறார். எதிர்காலத்தில் மேலும் பல தலைவர்கள் இதில் பங்கேற்க வேண்டும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே வேளை, ரவீந்தர் சிங் கூறுகையில், “அனைவரும் தயக்கமின்றி 37 மாடிகள் ஏற முயற்சித்தார்கள். இது மகிழ்ச்சிகரமானது. அனைவருக்கும் உடல்நல வாழ்வை எளிதாகவும், மலிவாகவும் இதன் வழி கொண்டு சேர்ப்பதே எங்கள் விருப்பம்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி, தொடர்பு அமைச்சின் பணியாளர்களிடையே ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும், உடற்பயிற்சி ஆர்வத்தை வலுப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக நடைபெற்றது.

Related News