கூலிம், ஆகஸ்ட்.11-
நாடு சுதந்திரம் பெற்று 68வது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வேளையில் நாட்டு மக்கள் சிலர் தேசியக் கொடியைய்ஜ் தவறான முறையில் பறக்க விடுவது அவர்களின் அலட்சியப் போக்கா அல்லது தெரிந்தும், தெரியாமல் செய்கிறார்களா என்பது குறித்து அறிய முடியவில்லை என்று கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹஜி ஹெல்மி யூசோப் தெரிவித்தார்.
தேசியக் கொடி என்பது நம் உயிருக்கு நிகரானது. அதனை மதித்து சரியான முறையில் பறக்க விட வேண்டும். அதுவே நம் நாட்டின் சுதந்திரத்திற்கு வழங்கும் மரியாதையாகும் என்றார் டத்தோ ஹெல்மி யூசோப்.

நேற்று கூலிம் கெலாடியில் அமைந்துள்ள மினி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோ ஹெல்மி யூசோப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூலிம் மாவட்டத்தில் இதுவரை தேசியக் கொடிகளைத் தவறான முறையில் பறக்க விட்டதில்லை என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் தேசியப் பள்ளிகள் தொடங்கி உயர்க்கல்விக் கூடங்கள் வரை அனைவரும் தேசிய பற்றுடன் இருந்து வருவது பெருமை அளிக்கிறது.
அந்த வகையில், கூலிம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் வரை கூலிம் மாவட்டத்திலுள்ள எல்லா இடங்களிலும் பறக்க விடப்பட்டுள்ள தேசிய கொடிகள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றார் டத்தோ ஹெல்மி யூசோப்.

ஏதேனும் இடங்களில் தேசியக் கொடிகள் தவறான முறையில் பறக்க விடப்பட்டிருந்தால் கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கி, சரி செய்யப்படும் என்றார் .








