பினாங்கு, ஜார்ஜ்டவுனில் இரு ஆடவர்களை வெட்டுக்கத்தியால் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக மூன்று நண்பர்கள் மீது இன்று ஜார்ஜ்டவுன் இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.
20 வயது கே. அருள் கெவின் ராஜ், 22 வயது பி. குகன், 24 வயது வி. விஸ்ணு ஆகிய மூவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் கோங் மிங் 2, சீனப்பள்ளி முன்புறம் 25 வயது சா ஜிங் பிங் என்பவரை வெட்டுக்கத்தியால் தாக்கியதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் 326-ஆவது பிரிவுடன் 34-ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மூவருக்கும் தலா 12 ஆயிரம் ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்றும், அவர்களின் கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாதந்தோறும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மற்றொரு நீதிமன்றத்தில் 17 வயது ஸ்டான்லி லிம் என்பவரை அதே இடம், அதே நேரத்தில் பாராங்கால் தாக்கியதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் மூவருக்கும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.








