கோலாலம்பூர், செப்டம்பர்.11-
தனக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், அப்படி இருந்தால் தன்னிடம் அது குறித்துத் தெரிவிக்குமாறும் எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்குக் கிண்டலாக பதிலளித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்.
கடந்த செவ்வாய்க்கிழமை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், இது குறித்து யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அஸாம் பாக்கியின் அறிக்கைக்கு இன்று பதிலளித்துள்ள மகாதீர், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தன் மீதான அவதூறு வழக்கைத் தாமதப்படுத்துவதற்காக இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றார் என்று கேலியாகக் கூறியுள்ளார்.








