கோலாலம்பூர், நவம்பர்.25-
இணையத்தில் அனுமதியின்றி திணிக்கப்படும் பாலியல் உள்ளடக்கங்களும், சிலர் தாமே உருவாக்கும் நெருக்கமான படங்களும், இணையத்தைப் பயன்படுத்தி வரும் மலேசிய சிறார்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சிறார் உரிமை, நலன் பேணும் ஐ.நா. நிதியகமான UNICEF ( யூனிசெஃப் ) தெரிவித்துள்ளது.
இச்சம்பவங்கள் குறித்து அக்குழந்தைகள் யாரிடமும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருவதாகவும் UNICEF எச்சரித்துள்ளது.
பகடிவதை மற்றும் மோசடிச் சம்பவங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ள இந்த இணையப் பாலியல் துஷ்பிரயோகமானது, குழந்தைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக UNICEF மலேசியாவின் துணைப் பிரதிநிதியான Sanja Saranovic தெரிவித்துள்ளார்.
இது போன்ற உள்ளடக்கங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றில் அனுமதியின்றி திணிக்கப்படும் பாலியல் உள்ளடக்கம் முதலிடம் வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியக் குழந்தைகள் எதிர்நோக்கி வரும் இணைய பாலியல் ஆபத்துகள் குறித்த, 2022-ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 4 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட 1 லட்சம் இளம் வயதினர், கடந்த சில ஆண்டுகளாக இணையப் பாலிய துஷ்பிரயோகத்தை எதிர்நோக்கி வருவது தெரிய வந்துள்ளது.








