நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் புகாரில், சமூக ஆர்வலர் பத்ருல் ஹிஷாம் என்ற சேகுபார்ட் உட்பட மூன்று நபர்களுக்கு எதிராக சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இடைக்காலத் தடை உத்தரவை ஆலய நிர்வாகம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.
ஆலய நிர்வாக சார்பில் அதன் கெளரவ செயலாளர் ஆறுமுகம் ராஜமாணிக்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அம்ரான் பின் ஜந்தான் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி, 'சேகுபார்ட்' எனும் முகநூல் பக்கத்தில் ஆலய நிதி முறைகேடு மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்து அவதூறான கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன. இந்தத் தவறான தகவல்கள் ஆலயத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாகக் கூறி, செயலாளர் ஆறுமுகம் இந்த வழக்கை தொடுத்தார்.
நீதிமன்ற உத்தரவின் மூலம் முதல் பிரதிவாதி பத்ருல் ஹிஷாம் என்ற சேகுபார்ட், இரண்டாம் பிரதிவாதி சுரேஷ்குமார் பெருமாள் மற்றும் மூன்றாம் பிரதிவாதி நடராஜன் மனோகரன் ஆகியோர் நேரடியாகவோ அல்லது அவர்களது முகவர்கள் மூலமாகவோ ஆலயத்தைப் பற்றி எவ்வித அவதூறு கருத்துக்களையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"ஆலயம் 1981-ஆம் ஆண்டு முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறது. ஆனால், தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். குறிப்பாக மூன்றாம் பிரதிவாதியான நடராஜன் மனோகரன், ஏற்கனவே ஆலயச் சிலையைப் பழுதுபார்க்க எடுத்துச் சென்று முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்பவர்" என்பதை ஆறுமுகம் தனது சத்தியப் பிரமான மனுவில் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறுமுகம் பெற்ற இந்த இடைக்காலத் தடை உத்தரவானது, வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அல்லது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். ஆலய நிர்வாகத்திற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சேகுபார்ட் தலைமையில் நாளை ஏப்ரல் 25 ஆம் தேதி சனிக்கிழமை ஆலயம் தொடர்பில் ஒரு கூட்டத்தையும், பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தையும் நடத்துவதற்கு பிரதிவாதிகள் திட்டமிட்டு இருந்த வேளையில் ஆலயம் சார்பில் ஆறுமுகம் அந்த மூவருக்கு எதிராக ஒரு தரப்பாக தொடுத்த இந்த வழக்கில் ஆலயம் மற்றும் ஆறுமுகம் சார்பில் வழக்கறிஞர் அஸ்மாவி இஸ்மாயில் ஆஜராகியிருந்தார்.















