ஷா ஆலாம், நவம்பர்.14-
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்ப வந்த ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
19 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் கிள்ளான் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை வரும் நவம்பர் 17 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்குப் போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சில உணர்ச்சிகரமான விவகாரம் அடங்கியிருப்பதால் இது குறித்து தாம் அதிகமாக விவரிக்க முடியாது என்றும், விசாரணை தொடர்கிறது என்றும் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
இது குண்டர் கும்பல் சம்பந்தப்பட்டது என்று முடிவுக்கு வந்து விட இயலாது என்றாலும் சுட்டுக் கொல்லப்பட்டவரின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
காருக்குள் இருந்த 34 வயது நபர், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
சம்பந்தப்பட்ட நபர் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கானப் பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் தேடப்பட்டு வந்தவர் என்று போலீசார் அறிவித்து இருந்தனர்.








