சொகுசு கார், விலை உயர்ந்த வீடுகள் என ஆடம்பர வாழ்க்கைப் பாணியைக் கொண்டுள்ள போலீஸ்காரர்களின் நிதி நிலையை ஆராயும்படி லஞ்சத்தை துடைத்தொழிக்கும் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. அரச மலேசியப் போலீஸ் படையில் லஞ்சத்தை துடைத்தொழிப்பதற்கு அவர்களின் நிதி நிலைமையை ஆராய்வது அவசியமாகும் என்று MCW எனப்படும் மலேசிய லஞ்சத்துடைத் தொழிப்பு கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜயிஸ் அப்துல் கரிம் அப்துல் கரிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய போலீஸ்காரர்கள் கிரிமினல்களுடன் கைகோர்த்துக்கொண்டு இருந்தால் நாடு என்னவாகும் என்று அண்மையில் மிகத் தெளிவாக எடுத்துரைத்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் ஷுஹைலி முஹமாட் சயின் அறைகூவலை தாங்கள் ஆதரிப்பதாக ஜயிஸ் அப்துல் கரிம் குறிப்பிட்டார்.
லஞ்சத்திலிருந்து விடுபட்ட ஓர் அரசாங்க ஏஜென்சியாக அரச மலேசிய போலீஸ் படை விளங்குவதற்கு கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்கள் தங்கள் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் மாறவில்லை என்றால், மாற்றப்படுவார்கள் என்று முஹமாட் ஷுஹைலி எச்சரித்து இருப்பது அந்த பாதுகாப்பு படையின் மேன்மையை உறுப்பினர்களுக்கு உணர்த்துகிறது என்று ஜயிஸ் அப்துல் கரிம் தெரிவித்தார்.








