கெடாவில் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறையான கேபிடிஎன், 11 பெட்ரோல் நிலையங்களில் சோதனை நடத்தியது.
அலோர் ஸ்டார், கூபாங் பாசு, சுங்கை பட்டாணி மற்றும் கூலிம் மாவட்டங்களில் உள்ள இந்த நிலையங்களில் ரோன்95 பெட்ரோல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. இதில் சேமிப்புத் தொட்டிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கேபிடிஎன் கெடா இயக்குநர் முஹமட் நிஸாம் ஜமாலுடின் கூறுகையில், பெட்ரோல் தொட்டிகளில் தண்ணீர் கலந்துள்ளதா என்பதை கண்டறிய ‘டிப்ஸ்டிக்’ அல்லது ‘டிப் ரோட்’ மூலம் கைமுறையாக அளவீடு செய்யப்பட்டதுடன், தானியங்கி தொட்டி அளவீட்டு முறையான ஏடிஜி பதிவுகளும் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆரம்பச் சோதனையில் தண்ணீர் கலந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனினும், தொடர்புடைய தொட்டிகள் மற்றும் பம்புகளில் இருந்து எடுக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மலேசிய ரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இதை இறுதி முடிவாகக் கருத முடியாது என்று கேபிடிஎன் தெரிவித்துள்ளது.








