கோலாலம்பூர், அக்டோபர்.12-
பொது உயர்க்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மிகவும் ஏழ்மையான மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்கள் அடுத்த ஆண்டு முதல் உதவித்தொகையாக மாற்றப்படும் என்று பிடிபிடிஎன் தலைவர் நோர்லிஸா அப்துல் ரஹிம் அறிவித்துள்ளார்.
e-Kasih தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையையும், அனைவருக்கும் உயர்க்கல்விப் பெறுவதை உறுதிச் செய்வதையும் இந்தத் திட்டம் காட்டுகிறது.
2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், அவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தவும் உதவும் என்று நோர்லிஸா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், முதல் நிலையில் தேர்ச்சி பெறும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6,000 மாணவர்களுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.








