கடந்த ஆண்டு சன்வே லகூன் தீம் பார்க்கில் நடைபெற்ற குடும்ப தின விழாவின் போது, பரிமாறப்பட்ட உணவால் 870-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC வழக்கு தொடர்ந்துள்ளது.
18 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பீட்டை ஆணையம் கோரியுள்ளது. சுமார் 5,800 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், கெட்டுப்போன உணவை வழங்கியதாகப் புகார் எழுந்தும் சன்வே லகூன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் ஆய்வில், உணவை நீண்ட நேரம் சேமித்து வைத்தது மற்றும் சமையலறை தூய்மையின்மையே இந்த உணவு நச்சுத்தன்மைக்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்று இழப்பீடு வழங்கக் கோரி ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








