ஜார்ஜ்டவுன், ஜூலை.23-
பண்டிகை அல்லது விற்பனை விழாக்களில் வெளிமாநில வர்த்தகர்கள் பங்கேற்பதை சீர்ப்படுத்தும் பினாங்கு மாநில அரசின் முடிவு மற்றும் கொள்கைக்கு மலேசிய இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் பினாங்கு மாநில கிளை முழுமையாக வரவேற்றுள்ளது.

கடந்த ஜுலை 21 ஆம் தேதி பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில், உள்ளூர் இந்திய வர்த்தகர்கள், குறிப்பாக தங்கள் வணிகங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தீபாவளி விற்பனைக்காக, ஆண்டு முழுவதும் காத்திருக்கும் வணிகர்களின் நீண்ட கால கவலையைக் கருத்தில் கொண்டு வெளியிட்ட அறிக்கைக்கு, முதலமைச்சருக்கு இவ்வேளையில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த வர்த்தகச் சபை தெரிவித்தது.
அதே வேளையில் பினாங்கு அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் பினாங்கு மாநில கிளையின் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன் குறிப்பிட்டார்.

உள்ளூர் இந்திய வணிகங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உச்ச நேரங்களில் இந்தியக் கண்காட்சிகள், விழாக்கள் அல்லது கார்னிவல்களை ஏற்பாடு செய்வதற்கு வெளிமாநில வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெளிவுபடுத்தியிருந்தார்.
உள்ளூர் இந்திய வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பினாங்கு மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமலாக்கம் காண்பது அவசியம் என்று டத்தோ பார்த்திபன் தெரிவித்தார்.
ஏனெனில், உள்ளூர் வர்த்தகர்களில் பலர் தீபாவளி விற்பனை போன்ற பண்டிகை விழாக்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த வர்த்தகர்கள் பெரும்பாலும் கடை வாடகை, ஊழியர்களின் ஊதியம் மற்றும் வரி செலுத்துதல் போன்று ஆண்டு முழுவதும் தங்கள் வர்த்தகக் கடமைகளைச் செய்து வருகின்றனர். எனவே பண்டிகைக் காலத்தில் இவர்கள் பயன் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதுதான் ஓர் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று டத்தோ பார்த்திபன் குறிப்பிட்டார்.
பினாங்கு லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பெரு நிலத்தில் உள்ள வர்த்தகர்கள் சார்பாக தாங்கள் குரல் கொடுத்து வரும் வேளையில் பொருளாதார சவால் நிறைந்த இந்தக் காலக் கட்டத்தில் பினாங்கு அரசின் இந்தக் கொள்கை உள்ளூர் வர்த்தகர்களுக்கு மிகவும் அவசியமானதாகும் என்று டத்தோ பார்த்திபன் குறிப்பிட்டார்.
இதனிடையே உள்ளூர் இந்திய வர்த்தகர்களைப் பாதுகாக்க பினாங்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று டத்தோ பார்த்திபன் தலைமையில் பினாங்கு லிட்டல் இந்தியாவில் வர்த்தகர் ஒன்று திரண்டு தங்கள் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர்.








