ஈப்போ, ஜூலை 2-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த ஓர் இந்திய தம்பதியரில் மனைவி குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட வேளையில் கணவர், எதிர்வாதம் புரிய ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
54 வயது ஜி. பெரம்லா என்ற அந்த மாது, தனது கணவரான 45 வயது மொஹிந்தர் சிங்குடன் கூட்டாக சேர்ந்து போதைப் பொருளை கடத்தியுள்ளார் என்பதற்கு போதுமான ஆதராங்களை நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் மஹமது தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், குடும்பமாது ஜி. பெரம்லா கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமோ அல்லது சாட்சியோ இல்லை என்று நீதிபதி அப்துல் வஹாப் குறிப்பிட்டார்.
அதேவேளையில் அந்த போதைப்பொருள் ஜி. பெரம்லாவின் கணவர் மொஹிந்தர் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதற்கு போதுமான முகாந்திரங்கள் உள்ளதால் அவர் எதிர்வாதம் புரிய உத்தரவிடப்படுகிறார் என்று நீதிபதி அப்துல் வஹாப் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மொஹிந்தர் சிங்கும், அவரின் மனைவி பெரம்லாவும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி மாலை 6.25 மணியளவில் பேரா, கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட செமோர், பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங்கில் உள்ள வீட்டில் 524.1 கிராம் ஹெரோயின் மற்றும் 485.4 கிராம் Monoacetyimorphines போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கணவனும், மனைவியும் குற்றங்சாட்டப்பட்டு இருந்தனர்.








