கெடா மாநில அரசுக்கு சொந்தமான கெடா அக்ரோ ஹோல்டிங் பிஎச்டிநிறுவனத்திற்கு 2 கோடியே 27 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள அரிசி விநியோகிக்கும் திட்டத்தில் போலி பத்திரங்களை சமர்ப்பித்து மோசடி புரிந்ததாக அரிசி இறக்குமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
37 வயது சி.குகனேஷ்வரன் என்ற அந்த அரிசி விநியோகிப்பு நிறுவன உரிமையாளருக்கு எதிராக நீதிபதி ரொசினா அயோப் முன்னிலையில் மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சி. குகனேஸ்வரன் கிள்ளானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளும் நீதிபதி முன்னிலையில் மருத்துவமனையிலேயே வாசிக்கப்பட்டது.
குகனேஸ்வரன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள எஸ்எம்இ டெவலப்மென் பேங்க் மலேசியா அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குகனேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
வங்கியில் தவறான தகவலும், போலியான ஆதாரங்களும் தரப்பட்டு குகனேஸ்வரன் இந்த மோசடி வேலையை புரிந்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








