ஈப்போ, நவம்பர்.01-
பேரா மாநிலத்தில் 3 ஆயிரத்து 266 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும், இன்னும் விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன என்று தேசியச் சொத்துத் தகவல் மையத்தின் (NAPIC) சமீபத்திய அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்னை வெறும் வாங்குவோரின் ஆர்வமின்மையால் மட்டும் ஏற்படவில்லை என்றும், மாறாக உயர்ந்த விலை நிர்ணயம், வங்கியில் வீட்டுக் கடன் ஒப்புதல் கிடைக்காது ஆகியவை முக்கியக் காரணம் என்று பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் Sandrea Ng விளக்கினார்.
வருமானம் இருந்தும் வங்கிக் கடன் கிடைக்காததால் வாங்கும் செயல்முறை தாமதமாவதே பெரும்பாலான வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார். இது சந்தையில் தேவை இல்லையென்று அர்த்தமல்ல. எனவே, மாநில அரசாங்கம் இனி வரும் திட்டங்களில் குடியிருப்பாளர்களின் உண்மையான தேவைகளுக்கும், மேம்பாட்டாளர்கள் கட்டும் வீடுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த கவனம் செலுத்தி, 2030ஆம் ஆண்டுக்குள் 57 ஆயிரம் மலிவு விலை வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.








