பாசீர் கூடாங், ஆகஸ்ட்.01-
ஜோகூர், பாசீர் கூடாங் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார், டத்தோ முஸ்தஃபா கமால் ஷம்சூடினுக்கு எதிராக 24 மாநகர் மன்ற உறுப்பினர்களில் 23 பேர், நம்பிக்கையில்லாப் பிரகடனத்தை இன்று அறிவித்துள்ளனர்.
டத்தோ பண்டாருடன் மாநகர் மன்ற உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் பல்வேறு விவகாரங்களில் உடன்பட முடியவில்லை. குறிப்பாக, முடிவு எடுக்கும் விவகாரத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை டத்தோ பண்டார் கிஞ்சிற்றும் பொருட்படுத்துவதில்லை என்று பாசீர் கூடாங் மாநகர் மன்ற உறுப்பினர்களின் கொறடாவான டத்தோ முகமட் அமீன் அஹ்மாட் தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் அதிகாரப் பகிர்வில் ஒரு பகுதியாக விளங்கும் மாநகர் மன்ற உறுப்பனிர்களின் பங்களிப்பை டத்தோ பண்டார் மதிப்பதில்லை என்று பண்டார் ஶ்ரீ ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ முகமட் அமீன் இதனைக் குறிப்பிட்டார்.








