கோலாலம்பூர், நவம்பர்.17-
மலேசியாவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய அவசர பதிலளிப்பு சேவையை, Telekom Malaysia Berhad உடன் இணைந்து தொடர்புத்துறை அமைச்சு நேற்று அமல்படுத்தியது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த MERS 999 அவசர பதிலளிப்பு சேவைக்குப் பதிலாகத் தற்போது NG MERS 999 என்ற அடுத்த தலைமுறை அவசர பதிலளிப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையானது, அவசர அழைப்புகளுக்கு, வேகமாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கக் கூடியது என்று Telekom Malaysia தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வழக்கம் போல் 999 என்ற அவசர அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் கூட, SaveME999 என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது காணொளி அழைப்புகள் உள்ளிட்ட கூடுதலான வசதிகளைப் பெறுவார்கள்.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் காணொளி வாயிலாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அவசர பதிலளிப்பு சேவை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் Telekom Malaysia தெரிவித்துள்ளது.
இந்த NG MERS 999 சேவையானது நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய MERS 999- சேவையின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் என்றும் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.








