கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள தங்கள் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்த பத்து பேர் கொண்ட கும்பல் தனது கணவர் ஞானராஜாவைத் தாக்கிய சம்பவம், திட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த கும்பலைப் போல் தெரியவில்லை என்று அந்த தொழில் அதிபரின் மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 6.30 மணிக்கும் 7.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், இயல்பான கொள்ளைச் சம்பவம் போல் இல்லை என்று கீதாஞ்சலி குறிப்பிட்டார்.
இது ஒரு கொள்ளைச் சம்பவம்தான் என்று முன்கூட்டியே முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம், சம்பந்தப்பட்ட நபர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் அவர்கள் எச்சரித்த விதம் அனைத்தையும் பார்க்கும் போது, கொள்ளையடிக்கும் போர்வையில் தங்களை மிரட்ட வந்த கும்பல் போல் தெரிகிறது.
அந்த நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த போது சில விநோதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைத் தம்மால் அம்பலப்படுத்த இயலாது என்று கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
எனினும் வழக்கு ஒன்றில் தமது கணவர் முக்கிய சாட்சியாக இருப்பதால் தமது கணவருக்கும், தங்கள் குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அவசியமான ஒன்று என்று கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.








