தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காலத்தில் தீவிரவாதிகளின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தலால் எப்போதும் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட்டதாக முன்னாள் தேசிய போலீஸ் படையின் துணைத்தலைவர் ஆயூப் கான் மைடின் பிட்ச்சே, தெரிவித்துள்ளார்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்லும் தாமான் தாசிக் பெர்டானா பகுதி உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் கூட தீவிரவாத அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்ததுடன், பயண வழிகளை அடிக்கடி மாற்றி, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புறத்தை எப்போதும் கண்காணித்து வந்ததாகவும் ஆயூப் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை திறம்பட எதிர்கொள்ள சொஸ்மா போன்ற சிறப்பு பாதுகாப்புச் சட்டங்கள் அவசியம் என்றும் அந்த நேர்காணலில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், பெரிய அளவிலான தீவிரவாத நடவடிக்கைகளில் பலரை ஒரே நேரத்தில் கைது செய்து விசாரிக்க, நடைமுறையில் இருக்கும் தடுப்புக் காவல் காலம் போதுமானதாக இருக்காது என்றும் ஆயூப் கான் தெரிவித்துள்ளார்








