அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், பினாங்கு பிராந்திய மேம்பாட்டு வாரியத் தலைவருமான ஷைக் ஹுசைன் மைடின், கட்டுமானத் திட்டம் தொடர்பாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 107 ரிங்கிட் 61 சென் லஞ்சம் பெற்றதாக அவர் மீது இன்று 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
53 வயதான ஷைக் ஹுசைன், ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி இர்வான் சுவாய்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, அக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.
பினாங்கின் செபராங் பிறை செலத்தான் பகுதியில் பெர்டா-டெக் தங்கும் விடுதி மற்றும் வசதிகளை அமைக்கும் திட்டத்தில், துணை ஒப்பந்தத்தை வழங்குவதற்காக இந்த லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து அவருக்கு 3 லட்சம் ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.








