கோலாலம்பூர், டிசம்பர்.20-
கிறிஸ்துமஸ் பண்டிகை கால அலங்கார விவகாரம் தொடர்பில் மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் செயல்முறைகளும் நடைமுறைகளும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.
உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கால அலங்காரங்கள் தொடர்பான விவகாரத்தில், அத்தகைய அலங்காரங்கள், ஜாகிம் (JAKIM) இலாகாவின் ஹலால் சான்றிதழ் நிபந்தனைகளை மீறவில்லை என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இந்த விளக்கத்தை நாம் மதிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட இடங்களில் இதன் அமலாக்கம் சீராக இருப்பதையும், குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதிச் செய்ய இதனை ஒரு பொதுவான வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.
இனம், மதம் மற்றும் மாநில, பிரதேச வேறுபாடுகளின்றி, குறிப்பாக பல சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் தங்கும் விடுதித் துறைகளில், மலேசிய வணிகங்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிச் செய்ய வேண்டிய தருணம் இதுவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, மலேசிய வணிகர்கள் தெளிவான முறையில், எவ்வித குழப்பமும் அல்லது விதிமுறைகளில் பல்வேறு விளக்கங்களும் இன்றிச் செயல்படுவதை உறுதி செய்ய, அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசாங்கச் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு செயல்படுத்தி வரும் ABCD வியூகத்தின் ஒரு பகுதியாகும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.








