ஜார்ஜ்டவுன், ஜூலை.19-
பினாங்கு, ஆயர் ஈத்தாம், தாமான் தெருபோங் இண்டா அடுக்குமாடிக் குடியிருப்பில், பூட்டிய வீட்டிற்குள் 61 வயது மூதாட்டி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், பாயான் பாரு தீயணைப்பு - மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு தலைவர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
சிறப்புக் கருவிகள் மூலம் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மீட்புப் படையினர், குளியலறையில் சுயநினைவின்றி கிடந்த மூதாட்டி தும் குவாங் ஹுங் என்பவர் என உறுதிச் செய்தனர். சடலம் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








