குவாந்தான், பிப்ரவரி.21-
பகாங் மாநிலத்தில் எந்தவொரு தரப்பினரும் நிலத்தை சுதந்திரமாக ஆக்கிரமிப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில் 'பூர்வீக நிலம்' அல்லது 'பரம்பரை நிலம்' என்ற சொற்களுக்கு இடமில்லை என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஓராங் அஸ்லி சமூகத்தினர் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான உரிமை, 1954-ஆம் ஆண்டு ஓராங் அஸ்லி சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7-ன் கீழ் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என்று சுல்தான் தெளிவுபடுத்தினார்.
முறையான எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி நிலத்தை ஆக்கிரமிப்பதோ, பயன்படுத்துவதோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோ சட்டத்தின்படி ஒரு கடுமையான குற்றமாகும். நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல என்று குறிப்பிட்ட சுல்தான், இது நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு 'புற்றுநோய்' போன்றது என்றார்.
இது நில நிர்வாக அமைப்பை சீர்குலைப்பதோடு, சட்டத்தின் இறையாண்மைக்கும், மாநிலம் மற்றும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது என்று சுல்தான் வருத்தம் தெரிவித்தார்.








