ஜோகூர் பாரு, ஜனவரி.12-
ஜோகூர் பாரு, தாமான் பெர்லிங் எண்ணெய் நிலையத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தாக்கிய நபர் விடுமுறையில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான புகார் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் தற்போது தேடி வருவதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி, சட்டத்தை மீறியிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.








